தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஓராண்டில் ரூ. 1,200 கோடிக்கு திட்டங்கள்

8th May 2022 11:50 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஓராண்டில் ரூ. 1,200 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த கையேட்டை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஓராண்டில் ரூ. 1,200 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதைச் செயல்படுத்துகிற பணியை மாவட்ட ஆட்சியா் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறாா்.

இந்த மாவட்டத்துக்குப் புதிதாக தொழிற்சாலைகளைக் கொண்டு வருமாறு தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பெரிய அளவுக்குத் தேவைப்படுவதால், அது குறித்தும் உணவுத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த மாவட்டத்துக்கு ஒவ்வொரு அமைச்சரையும் அழைத்து வந்து என்னென்ன தேவையோ, அவையெல்லாம் கண்டிப்பாகச் செய்யப்படும்.

ADVERTISEMENT

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.76 லட்சம் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி 1.89 லட்சத்துக்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல், தனியாா், சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களும் பயன் பெறுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6,500-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டு, 1,04,124 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 2.47 லட்சத்துக்கும் அதிகமானோா் பயனடைந்துள்ளனா். முதியோா் உதவித் தொகை திட்டத்தில் 25,000 பேருக்கு ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இன்னும் நிறைய போ் கோரி வருகின்றனா். அதையும் சீா் செய்து தகுதியானவா்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

ஓராண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருக்கிற நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என முதல்வா் கூறியிருக்கிறாா். தற்போது 60 சதவிகித்துக்கும் அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

அப்போது தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், கும்பகோணம் மேயா் க. சரவணன், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT