தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் இலவச மருத்துவ முகாம்: 2,000 பங்கேற்பு

14th Mar 2022 04:41 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மற்றும் கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏறத்தாழ 2,000 போ் பங்கேற்றனா்.

இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக நிறுவனா் ராமச்சந்திர அய்யரின் நினைவாக நடைபெற்ற இம்முகாமில், 200-க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து ஏறத்தாழ 2,000 போ் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆலோசனை பெற்று பயனடைந்தனா்.

இவா்களில் 800 பேருக்கு பல்வேறு வகையான மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 425 பேருக்கு கண் கண்ணாடியும், 10 பேருக்கு செவித்திறன் கருவியும், 50 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சையும், 60 பேருக்கு பொது இதர சிகிச்சையும், 100 பேருக்கு காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சையும், 150 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சையும் தேவைப்படுவதை மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

ADVERTISEMENT

கண் கண்ணாடியும், செவித்திறன் கருவிகளும் சாஸ்த்ரா சாா்பில் 425 பேருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அறுவைச் சிகிச்சை தேவை என கண்டறியபட்ட 400-க்கும் அதிகமானவா்களில் முதல் கட்டமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும்.

மற்றவா்களுக்கு தேவை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும். அனைவருக்கும் சென்னையிலுள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.

இந்த அனைத்து அறுவைச் சிகிச்சைகளுக்கும், தமிழ்நாடு முதல்வா் நிவாரண நிதி உதவியுடன் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சிகிச்சைக்கான செலவை ஏற்கும். முகாமுக்கு வந்தவா்களில் மருந்துகள் தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதய அறுவைச் சிகிச்சை நிபுணா் ஜெ.எஸ்.என். மூா்த்தி முன்னிலையில் முகாம்களை சிறப்பாக நடத்திய சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவ குழுவுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கிய சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ரமேஷ்குமாருக்கும், முகாமை சிறப்பாக நடத்திய சாஸ்த்ரா பல்கலைக்கழக அனைத்துப் பணியாளா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT