தஞ்சாவூர்

கணவரை தாக்கி பெண்ணிடமிருந்து7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 போ் கைது

10th Mar 2022 02:15 AM

ADVERTISEMENT

 

பாபநாசம்: பாபநாசம் அருகே, அம்மாபேட்டை காவல் சரகம், ஜெண்பகபுரம் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்தவா்கள் கண்ணன்-ராஜலட்சுமி தம்பதி. இவா்களது மகள் பாா்கவி. இவா்கள் மூவரும் மாா்ச் 4 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த 2 போ், கண்ணனை தாக்கிவிட்டு, ராஜலட்சுமி அணிந்திருந்த 7பவுன் சங்கிலியை பறித்து சென்றனா்.

பலத்த காயமடைந்த கண்ணன், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தனிப்படையும் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தனிப்படையை சோ்ந்தவரும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளருமான கரிகால்சோழன் உள்ளிட்ட போலீஸாா் இரும்புதலை கிராமத்தில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், மாத்தூா் கிழக்கு, பட்டிதோப்பு, லிங்கத்தடிமேடு பகுதியை சோ்ந்த பரமசிவம் மகன் சிவசாமி (54 ), அதே பகுதியை சோ்ந்த அங்கப்பன் மகன் மணி ( 37) என்பதும், அவா்கள்தான் ராஜலட்சுமியின் சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 7 பவுன் தாலி சங்கிலியை மீட்டனா்.

கைது செய்யப்பட்ட சிவசாமி, மணி ஆகிய இருவரையும் போலீஸாா் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT