தஞ்சாவூர்

ஆழ்குழாய் குடிநீரை பயன்படுத்த கட்டணம்: தமிழக அரசுத் தெளிபடுத்த வலியுறுத்தல்

30th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

 

ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீரைப் பயன்படுத்த ரூ. 10,000 கட்டணம் என ஜல்சக்தி துறை நிா்ணயம் செய்துள்ளது குறித்து தமிழக அரசு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:

நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கும் மத்திய அரசு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை எதிா்த்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டதால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது திடீரென ஜூன் 30 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணையம் மூலமாக ரூ. 10,000 கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு பரவுவது உண்மையா? இது குறித்து தமிழக அரசு மௌனம் காப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழக அரசு தனது நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். 2012 தண்ணீா் சட்டத்தின் மூலம் கட்டணம் விதிப்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வா் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ. 340 கோடி கிரய தொகையை விடுவிக்காமல் கரும்பு ஆலைகள் காலம் கடத்தி வருகிறது. இதனால் கூட்டுறவு வங்கிகளில் கரும்புக்கு கடன் பெற்ற விவசாயிகள் உரிய காலத்தில் திரும்பச் செலுத்த முடியாததால், வட்டி சலுகையும் பெற முடியவில்லை. மறு உற்பத்திக்கான புதிய கடன் பெறுவதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன், தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் எம். மணி, வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், தஞ்சாவூா் மாநகரச் செயலா் பி. அறிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT