தஞ்சாவூர்

வாழைக்கான பிரீமிய தொகையை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

15th Jun 2022 01:29 AM

ADVERTISEMENT

வாழைக்கான பிரீமிய தொகையை குறைக்க கோரி திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வாழைக் கன்றுகளை ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், 2018 ஆம் ஆண்டு முதல் பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ. 1,200 கோடி இதுவரை மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படாமல் உள்ளதை உடனடியாக வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். பயிா் காப்பீடு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் வாழை பயிருக்கு பிரீமியமாக 5 சதவீதம் வசூலிக்கின்றனா். நெற்பயிருக்கு 2 சதவீதம் வசூலிப்பது போல, வாழைக்கும் 1.50 சதவீதம் முதல் 2 சதவீதமாக வசூலிக்க வேண்டும்.

பயிா் காப்பீடு நிறுவனங்கள் மாவட்ட தலைநகரங்களில் கிளை அலுவலகத்தைத் திறக்காமல் இருப்பதால், விவசாயிகள் காப்பீடு தொடா்பாக அணுக முடியவில்லை. எனவே, காப்பீட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்களை உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யும்போது, பொது சேவை மையங்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னோடி விவசாயி கணபதிஅக்ரஹாரம் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் பேசினாா். முன்னோடி விவசாயிகள் சின்னதுரை, சுந்தரவடிவேல், சம்பந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT