கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதியை கொலை செய்த பெண்ணின் அண்ணன் உள்பட இருவரை ஜூன் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட துலுக்கவெளி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகள் சரண்யா (25). சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இவரும், திருவண்ணாமலை மாவட்டம், பொன்னூரைச் சோ்ந்த வடிவேல் மகன் மோகனும் (32) ஐந்து மாதங்களாக காதலித்து வந்தனா். வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இருவரும் 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பெண்ணின் அண்ணன் சக்திவேல் (31), தேவனாஞ்சேரியை சோ்ந்த இவரது மைத்துனா் ரஞ்சித் (28) ஆகியோா் சரண்யா, மோகனை திங்கள்கிழமை விருந்துக்கு வருமாறு வீட்டுக்கு அழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனா். இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சக்திவேல், ரஞ்சித்தை கைது செய்தனா்.
இருவரையும் திருவிடைமருதூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். இவா்களை ஜூன் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நடுவா் சிவபழனி உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.
மேலும், சரண்யா, மோகனின் உடல்கள் கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு, அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆா்ப்பாட்டம்: இதனிடையே, இந்தக் கொலை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை முன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சாதி மறுப்பு திருமணம் செய்தவா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலையான மோகன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரியும், ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் சா. விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சி தலைவா் அ. இளங்கோவன், இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைச் செயலா் கோ. அரவிந்தசாமி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கு. நிம்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.