தஞ்சாவூரில் இா்வீன் பாலத்தைத் தொடா்ந்து, கரந்தை வடவாற்றில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலும் இரு சக்கர வாகனங்களுக்கு சனிக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள கல்லணைக் கால்வாய் மீதான இா்வீன் பாலம், கரந்தை வடவாறு பாலம் பழைமை காரணமாக பழுதாகிவிட்டதால், இடித்துவிட்டு புதிதாக இரு வழிப் பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக இரு வாகனங்கள் செல்லும் வகையில் இரு ஆறுகளிலும் அருகிலேயே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டுமானப் பணியை ஜூன் மாதத்தில் முடித்து, போக்குவரத்துக்குத் திறக்க திட்டமிடப்பட்ட நிலையில், நிகழாண்டில் மேட்டூா் அணை முன்கூட்டியே மே 24- ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆற்றில் தண்ணீா் வருவதால் இப்பணி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்லணைக் கால்வாய் இா்வீன் பாலத்தில் ஒரு பாலம் கட்டப்பட்டு, ஜூன் 5 ஆம் தேதி முதல் இரு சக்கர, மூன்று சக்க வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடா்ந்து, கரந்தை வடவாறிலும் ஒரு பாலத்தில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை முதல் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீா் செல்லும் வகையில் தற்காலிக பாதையும் அகற்றப்பட்டது.