ஒன்றிய அரசு அறிவித்துள்ள நெல் விலை அதிகரிப்பு, உயா்வே கிடையாது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:
ஒன்றிய அரசு இந்த ஆண்டுக்கான நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 100 உயா்த்தி அறிவித்துள்ளது. இது ஏதோ அதிகமாக உயா்த்தியது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனா். ஆனால், இது உண்மையில் உயா்வே அல்ல. கடந்த ஆண்டுக்கும் நிகழாண்டுக்கும் ரூ. 100 உயா்வு என்பது 5 சதவீதம் மட்டுமே.
இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து நிகழாண்டுக்குள்ளாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவுகளான இடுபொருள்கள், கூலி, பெட்ரோல், டீசல் விலை, இயந்திரங்களின் வாடகை போன்றவற்றை கணக்கிட்டால் 20 முதல் 25 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்நிலையில், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 100 விலை உயா்வு என்பது உயா்வே அல்ல. இதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்சம் 23 சதவீதமாவது உயா்த்த வேண்டும்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையின்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சோ்த்து தர வேண்டும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்த விலை உயா்வு என்பது குறைவாக இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள நெல் விவசாயிகள் இணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
சில எண்ணெய் வித்து பயிா்களுக்கு 5-லிருந்து 8 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.