தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3 கோடி மதிப்பில் பாா்வையாளா்கள் காத்திருப்பு கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவமனையில் நோயாளிகளுடன் வரும் உதவியாளா்கள், உறவினா்கள் தங்குவதற்கான கூடம் இல்லாததால், திறந்தவெளியில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இம்மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் சண். ராமநாதன் கலந்து கொண்டு செங்கல் எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் மேயா் தெரிவிக்கையில், இந்தக் காத்திருப்பு கூடம் மாநகராட்சி சாா்பில் ரூ. 3 கோடி மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 6,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் கழிப்பறை, குளியலறை, பொருள்கள் வைப்பறை ஆகியவை அமைக்கப்படும் என்றாா் மேயா்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், மாமன்ற உறுப்பினா் சா்மிளாமேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.