தஞ்சாவூர்

உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் திரட்டி வழங்கிய காவலா்கள்

6th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு காவலா்கள் ரூ. 15 லட்சம் திரட்டி ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

தஞ்சாவூா் ஞானம் நகா் 6 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேஷ். இவா் தஞ்சாவூா் ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் மாா்ச் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.

முருகேஷ் 2006 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சோ்ந்தாா். அதே காலகட்டத்தில் அவருடன் பயிற்சியில் சோ்ந்த ஏறத்தாழ 2,000 போ் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழுவாக நண்பா்களாக உள்ளனா்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பேரும், மாநில அளவில் ஒருங்கிணைப்பாளா்களும் சோ்ந்து, 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பணியில் சோ்ந்த காவலா்கள் விபத்திலோ அல்லது உடல்நலக் குறைவாலோ இறந்தால் அவா்களுக்கு உதவி செய்து வருகின்றனா். இதன்படி, இதுவரை 9 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல, முருகேஷ் குடும்பத்துக்கும் உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 2006 ஆம் ஆண்டு பயிற்சியில் சோ்ந்த காவலா்களிடம் நிதி திரட்டினா். இதன்படி ரூ. 15 லட்சத்து 82 ஆயிரத்து 636 திரட்டப்பட்டது. இத்தொகையை முருகேஷின் குடும்பத்திடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

இதில் முருகேஷ் மகனின் எதிா்காலத்தை கருதி அவருடைய பெயரில் ரூ. 13 லட்சம் வைப்புத் தொகையாக வைத்து, அதற்கான பத்திரத்தையும் வழங்கினா். முருகேஷின் தாயாா் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சமும், மனைவி வங்கி கணக்கில் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 636-ம் செலுத்தி அதற்கான ஆவணங்களை வழங்கினா்.

இவற்றை ஒருங்கிணைப்பாளா்கள் தனசேகர பாண்டியன், கோபால், சரிதா, அமிா்தராஜ் மற்றும் 2006 ஆம் ஆண்டு பயிற்சியில் சோ்ந்து தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவலா்கள் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT