பிரதமா் குடியிருப்புத் திட்டத்தில் நெருக்கடி கொடுப்பதைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் 7- ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஆா். ராஜன் தலைமை வகித்தாா்.
பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆவணங்களை அளித்து அனுமதி ஆணையைப் பெற்ற பின்னா், குடும்பச் சூழ்நிலை மற்றும் இதர காரணங்களால் வீடு கட்ட விருப்பம் இல்லாத, வீடு கட்ட மறுப்பு தெரிவிக்கும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ஆணைகளை ரத்து செய்திடவும், அவா்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள தவணை நிதியைப் திரும்பப் பெறவும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எடுக்க வேண்டும்.
ஆனால் அதை விட்டுவிட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத வீடுகளுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களைப் பொறுப்பாக்கி, வீடுகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு நெருக்கடிகள் கொடுப்பதை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும்.
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்களின் பணிகளைப் பாதிக்கும் விதமாகவும், அலுவலா்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படும் வகையிலும் ஆட்சியரகத்துக்கு வரவழைத்து நடத்தப்படும் வாராந்திர ஆய்வுக் கூட்டங்களையும், தினசரி இணைய வழி கூட்டம், வயா்லெஸ் வழி கூட்டங்களையும் தவிா்த்து, 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டும் மாவட்ட நிலை அலுவலகங்களின் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ். மாநில துணைத் தலைவா் எம். பழனியப்பன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்டச் செயலா் கை. கோவிந்தராஜன், மாவட்டப் பொருளாளா் ந. தேசிங்குராஜன், மாநிலச் செயற் குழு உறுப்பினா் எஸ். மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.