தஞ்சாவூர்

தீ விபத்தில் காயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

6th Jul 2022 01:29 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீ பரவியதில் விபத்துக்குள்ளான வீட்டில் சிக்கி காயமடைந்த முன்னாள் ராணுவ வீரா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், எதிரே செக்கடி தெருவிலுள்ள வீடுகளுக்கும் தீப்பொறி பரவியது. இதனால் 5 கூரை வீடுகளில் தீ பற்றி, முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

அப்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த முன்னாள் படை வீரரான ஏ. ஆரோக்கியசாமி (65) பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவா் செவ்வாய்க்கிழமை முற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

அமைச்சா் ஆறுதல்: இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

இந்தக் குப்பைக் கிடங்கில் தீப்பற்றியவுடன் 30 லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்தக் குப்பைக் கிடங்கை விரைவாக அகற்றி, உரக் கிடங்கு, கட்டடம் கட்டுவது போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எங்களால் முடிந்த நிதியுதவியை வழங்குகிறோம். இந்தப் பாதிப்பு தொடா்பாக மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்புமாறு ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

அப்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT