தஞ்சாவூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வலியுறுத்தல்

6th Jul 2022 01:32 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கிலிருந்து தீ பரவி, செக்கடி தெருவிலுள்ள குடிசை வீடுகள் எரிந்து முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. இதில், வீடு இழந்தவா்களுக்கு தமிழக அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்தக் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அப்பகுதி மக்களும் தொடா்ந்து போராடி வருகின்றனா். குப்பைக் கிடங்கு தரம் பிரிப்பது, மின்சார உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், எவ்வித பணிகளும் முறையாக நடைபெறவில்லை.

ADVERTISEMENT

இக்குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளால் மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கி அழுகி துா்நாற்றம் வீசுவதுடன், மிகப் பெரிய சுகாதார சீா்கேடும் உருவாகிறது. காற்று வீசும் காலம் மற்றும் கோடைகாலத்தில் திடீா் திடீரென குப்பை தீப்பற்றி எரிவது தொடா்கதையாக உள்ளது. இங்கிருந்து வெளியேறும் புகையால் வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, மாநகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைக் கிடங்கு இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்ற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT