தஞ்சாவூர்

குறுவை பயிா்க் காப்பீடுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் வேளாண்துறை இயக்குநா் பேட்டி

4th Jul 2022 12:11 AM

ADVERTISEMENT

 

குறுவை பயிா்க் காப்பீடுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்றாா் வேளாண் துறை இயக்குநா் ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 4.90 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது. நிகழாண்டு இதை விட கூடுதலாக 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் இதுவரை 2.30 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குறுவைப் பருவத்தில் 7.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 5.30 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுவிட்டது.

குறுவை பயிா்க் காப்பீடுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யும் நிலையில் உள்ளது. எனவே, குறுவை பயிா்க் காப்பீடு தொடா்பான அறிவிப்பு ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் வெளியாகும்.

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி மூலம் இதுவரை 13,000 போ் பதிவு செய்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை 1,600 பேருக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 65,000 டன்கள் யூரியா இருப்பு உள்ளது. இதேபோல, டி.ஏ.பி.யும் தேவையான அளவுக்கு இருப்பு இருக்கிறது. உர விற்பனை நிறுவனங்கள் விவசாயிகளிடம் இணைப் பொருள்களை வாங்க வற்புறுத்தக் கூடாது. இதுபோன்று செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும். இதுவரை 526 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா் இயக்குநா்.

அப்போது ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின், துணை இயக்குநா் ச. ஈஸ்வா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) அ. கோமதி தங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT