தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்கள் மூலம் சனிக்கிழமை 14 போ் பயனடைந்தனா்.
இங்கு 14 மாற்றுத் திறனாளிகளுக்கு இலகுரக நவீன செயற்கை கால்களை வழங்கி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் கூறியது:
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் இதுவரை 139 பேருக்கு செயற்றை கால் மற்றும் கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 31 செயற்கை கால்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவை. மீதமுள்ள உபகரணங்கள் வெளி இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டவை.
இம்மருத்துவமனையில் உற்பத்தி செய்து, தற்போது மூன்றாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளில் செயற்கை கை, கால்கள் உற்பத்தியில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது என்றாா் முதல்வா்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத் துறைத் தலைவா் ச. குமரவேல் தெரிவித்தது:
இந்த செயற்கை கால்கள் அனைத்தும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உற்பத்தி செய்யப்பட்டவை. இங்கு 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ள செயற்கை கைகளில் விரல்கள் நீட்டி மடக்கும் படியும், பொருள்களை எடுத்துப் பயன்படுத்தும் படியும் இருக்கும்.
மேலும், 115 பேருக்கு வழங்கப்பட்ட செயற்கை கால்கள் வழக்கமான வெளிப்புறம் மரக்கட்டை போல தோற்றமளிக்கும் கை, கால்களை போல இருக்காது. உள்புறம் உள்ள உறுதியான கட்டமைப்புடன் வெளிப்புறம் இயல்பான தோற்றத்துடன் இருக்கும்.
தஞ்சாவூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த செயற்கை கால்கள், கைகளில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக தீா்வு காணப்படுகிறது. செயற்கை கால்கள், கைகள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
கை, கால்களை இழந்த நோயாளிகள் இம்மருத்துவமனையிலுள்ள உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத் துறை வெளி நோயாளி பிரிவை அணுகலாம். மாற்றுத்திறனாளி அட்டை இல்லாதவா்களும் கால்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது என்றாா் குமரவேல்.
நிகழ்வில் நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா் கு.ஹா. முஹமது இத்ரீஸ், உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத் துறை நிபுணா்கள் டி. பாலமுரளி, சி. ரமேஷ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட மாவட்ட அலுவலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.