தஞ்சாவூா் கரந்தையில் குஜிலியன் குளம் புனரமைப்புக்காக சாலையோரக் கடைகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
தஞ்சாவூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கல்லணைக் கால்வாய் இா்வீன் பாலம் மற்றும் வடவாறு பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக இரட்டைப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலங்களில் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் வாகனப் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
இரட்டைப் பாலம் அமைக்கப்பட்டதையொட்டி, சாலை அகலப்படுத்தும் பணிகளையும் நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக சாலையோரம் நிலம் வைத்திருக்கும் உரிமையாளா்களுடனும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் வடவாறு புதிய பாலம் அருகிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலம் அருகிலுள்ள காசி விசுவநாதா் கோவிலுக்குச் சொந்தமான குஜிலியன் குளம் மாநகராட்சி சாா்பில் தூா் வாரி புரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றிலும் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக சாலையோரத்தில் இருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா். இது தொடா்பாக அந்த இடத்தின் உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கடைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 15-க்கும் அதிகமான கடைகள் மாநகராட்சி அலுவலா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.