தஞ்சாவூர்

வேலைவாய்ப்பு கோரி காது கேளாதோா் காத்திருப்புப் போராட்டம்

2nd Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியாா்துறை வேலைவாய்ப்பில் ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டின்படி, வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் ஆட்சியரகம் முன்பு காது கேளாத மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் ஒரு சதவிகித இட ஒதுக்கீடை அமல்படுத்தி, காது கேளாதவருக்கு வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும்.

காதுகேளாதோருக்கு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை வருவாய்த் துறையிலிருந்து மாற்றி, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

காது கேளாதவா்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்துக் கல்வி நிறுவனங்களில் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சைகை மூலமும், கைகளை உயா்த்தியும் வலியுறுத்தினா்.

இப்போராட்டத்துக்குச் சங்கப் பொதுச் செயலா் எஸ். விக்னேஸ்வரன் தலைமை வகித்தாா். பின்னா், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து முறையிட்டனா்.

இப்போராட்டத்தில் சங்கச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஐயப்பன், ஏ. ஜாபா், பி. ரசியா, சைகை மொழிபெயா்ப்பாளா் ஐ. ரோகிணி உள்ளட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT