தஞ்சாவூர்

'மாணவி தற்கொலையை பாஜக பெரிதாக்கினால் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் '

DIN

மாணவி தற்கொலையை பாஜக பெரிதாக்கினால், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மாணவி தற்கொலை செய்து கொண்ட மைக்கேல்பட்டியில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்த அவர் பின்னர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் படித்து வந்த லாவண்யா தற்கொலை செய்தது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடியது. அதேசமயம் லாவண்யா மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளி 162 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில், படித்த பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்குத்தான் இப்பள்ளி நிர்வாகம் கல்விக் கொடுக்கிறது. அவர்களை விடுதியில் தங்க வைத்து பராமரித்து வருகிறது. இந்நிலையில், மாணவியின் தற்கொலை புரியாத புதிராக இருக்கிறது. இவர் விஷம் குடித்து 11 நாள்கள் கழித்துதான் மாணவி இறந்துள்ளார்.

வீட்டில் கூட பிரச்னை இருந்ததாகச் சொல்கின்றனர். இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எல்லா மதத்தினரும் படிக்கும் அப்பள்ளியில் இந்த மாணவியை மட்டும் மதமாற்ற முயற்சி செய்ததாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை. மதம் மாற்றம் நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில் ஒரு இடத்தில் கூட மத மாற்றம் பற்றிய கருத்து இடம்பெறவில்லை. நடக்காத ஒரு சம்பவத்தை, உண்மைக்கு மாறான செய்தியை இட்டுக்கட்டி மத மாற்றம் நடந்தது போன்று தமிழகத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. 

தேசத்தில் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டது போன்று இந்தச் சம்பவத்தை மாற்ற பாஜக தேசியத் தலைமை முயற்சி செய்கிறது. அமைதியான தமிழகத்தில் மத பதற்றத்தையும், மத மோதலையும் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மத மாற்றம் என்ற புகாரை தமிழக அரசு நிராகரிப்பது மட்டுமல்லாமல், அமைதியாக இருக்கும் தமிழகத்தைச் சீரழிக்கும் பாஜக முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக முயற்சிக்குத் தமிழக மக்கள் செவி சாய்க்கக்கூடாது. 

இந்த பிரச்னையில் அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக செயல்படுகிறது. மாணவியின் தற்கொலைக்குக் குடும்ப பிரச்னை காரணமாக இருக்கலாம் என புகார் எழுந்துள்ளதால், பெற்றோரையும் விசாரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், கிராம மக்கள் என அனைவரிடமும் பாரபட்சமின்றி விசாரணை செய்து உண்மை நிலவரத்தைத் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும். பாரபட்சமற்ற விசாரணைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இந்த பிரச்னையை பாஜக பூதாகரமாக்க முயற்சி செய்தால் தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். 

மைக்கேல்பட்டி கிராம மக்கள் விரும்பாதபோது பாஜக குழு அங்கே சென்று விசாரிக்க எந்த அதிகாரமும் கிடையாது என்றார் பாலகிருஷ்ணன். அப்போது, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி. நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT