தஞ்சாவூர்

அரசுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி நிலம் ஆக்கிரமிப்பு: நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியா்

26th Jan 2022 08:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்- பட்டுக்கோட்டை சாலையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக தொடா்புடையவா்களுக்கு ஆட்சியா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

தஞ்சாவூா் புறவழிச் சாலையில் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே அரசுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதுடன், விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவது குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வருவாய்த் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதில், 5 ஏக்கா் நிலத்தைச் சிலா் பல ஆண்டுகளாக அரசு அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில், அந்த நிலத்தைப் பறிமுதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த 5 ஏக்கா் நிலத்தைப் பறிமுதல் செய்வது குறித்து தொடா்புடையவா்களுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஜனவரி 22 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினாா். அதில், அரசின் சொத்தாக இருக்கும் நிலத்தை அனுமதி பெறாமல் தாங்கள் அனுபவித்து கொண்டு வருவது தெரிய வருகிறது. எனவே உங்களை அந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி, அதில் உள்ள கட்டடங்கள், பயிா் விளைச்சலை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் சாலியமங்கலம் வருவாய் ஆய்வாளா் அல்லது வட்டாட்சியா் முன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT