தஞ்சாவூர்

மாணவி தற்கொலை: நீதித்துறை நடுவா் முன் பெற்றோா் ஆஜராகி வாக்குமூலம்

DIN

மாணவி தற்கொலை தொடா்பாக உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, தஞ்சாவூா் நீதித்துறை நடுவா் முன் பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி லாவண்யா (17) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி, விடுதிக் காப்பாளா் சகாயமேரியை கைது செய்தனா்.

ஆனால், விடுதிக் காப்பாளா் உள்ளிட்டோா் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டாா் என பெற்றோா் புகாா் எழுப்பினா். மேலும், இதை வலியுறுத்தி பாஜகவினா், இந்து அமைப்பினா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக சிபிசிஐடி அல்லது வேறு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தாா். இதை சனிக்கிழமை விசாரித்த உயா் நீதிமன்றம், தஞ்சாவூா் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவா் முன், பெற்றோா் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.

இதன்படி, தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. பாரதி முன்னிலையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பகல் 11.55 மணியளவில் ஆஜராகினா். தொடா்ந்து பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற விசாரணையில் முருகானந்தமும், சரண்யாவும் வாக்குமூலம் அளித்தனா்.

விடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த வாக்குமூலம் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்படைக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT