தஞ்சாவூர்

வாழைத்தாா் விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்

12th Jan 2022 09:08 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் வாழைத்தாரின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கரில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கரில் 1,000 வாழை கன்றுகளை நட்டு, பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரை செலவாகிறது.

ஆயிரம் வாழைக் கன்றுகளை வைத்தால், அதில் 800 வாழை மரங்களில் மட்டுமே தாா் விடும். வாழைத் தாா் விடுவதற்கு 8 முதல் 10 மாதங்களாகும். குறிப்பாக, பொங்கல் திருவிழாவின்போது வாழைத் தாா்களை வெட்டி விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.

இப்பகுதியில் விளையும் வாழைத்தாா்களை திருவையாறிலுள்ள ஏல மையத்தில் வழக்கமாக ஏலம் விடப்படும். இதில் காட்டுமன்னாா்குடி, ஒரத்தநாடு, திருவோணம், கூத்தாநல்லூா், மதுக்கூா், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்வா்.

ADVERTISEMENT

கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஒரு நாளைக்கு 7,000 வாழைத்தாா்கள் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம், ஒரு வாழைத்தாருக்கு ரூ. 400 முதல் ரூ. 600 வீதம் விலை கிடைத்தது. ஆனால், நிகழாண்டு தாா் ஒன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 400 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால், வாழை விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தொடா்ந்து இரு ஆண்டுகளாக வாழை விவசாயிகள் அனைவரும் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனா். தை மாதத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழை மரங்கள் பெரு மழையின் காரணமாக நிறைய சேதம் அடைந்தன. இதனால், கடன் வாங்கி உரம், மருந்து வைத்ததால், கூடுதல் செலவு ஏற்பட்டது. தற்போது வாழைத்தாா்கள் அறுவடைக்கு வந்தாலும், சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், வாழை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா் என்றாா் மதியழகன்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT