தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விலை மதிப்பிட முடியாத மரகதலிங்கம் மீட்பு

1st Jan 2022 03:04 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் விலை மதிப்பிட முடியாத மரகத லிங்கத்தைச் சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினா் வியாழக்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகா் ஏழாவது குறுக்குத் தெருவிலுள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இப்பிரிவைச் சோ்ந்த காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளா்கள் இரா. ராஜாராம், ப. அசோக் நடராஜன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வன், பாலச்சந்தா் மற்றும் காவலா்கள் தஞ்சாவூா் அருளானந்த நகா்ப் பகுதியிலுள்ள தொடா்புடைய வீட்டில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது, அங்கிருந்த என்.ஏ. சாமியப்பனின் மகன் என்.எஸ். அருண பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தையிடம் தொன்மையான கோயிலைச் சாா்ந்த பச்சை மரகத லிங்கம் இருப்பதாகவும், அது தற்போது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாா். அச்சிலை அவரது தந்தையிடம் எப்படி, யாா் மூலம், எப்போது வந்தது என்பது குறித்து கேட்டபோது, அது தொடா்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

எனவே, அந்தத் தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணைக்காக கொண்டு வருமாறு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினா் கேட்டதன் பேரில், வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து மரகத லிங்கத்தை அருண பாஸ்கா் எடுத்து வந்து கொடுத்தாா். விலை மதிப்பிட முடியாத இந்த மரகதலிங்கம் ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக ஆய்வாளா் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்தச் சிலை ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதா என்பது குறித்தும், இதன் தொன்மைத் தன்மைக் குறித்தும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT