சத்துணவுப் பணியாளா்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளா்களின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாகக் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையில் ஆண் வாரிசுதாரா்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசாணை எண் 48-ன் மூலம் அந்த வாய்ப்புப் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாணை 48-ஐ ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே சிறப்பு சேமநலநிதி, ஒட்டுமொத்த தொகை, பொது வைப்புநிதி தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவா் வ. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்புத் தலைவா் கோ. சீனிவாசன், பொதுச் செயலா் ர. தெய்வசிகாமணி, பொருளாளா் எஸ்.ஆா். ரெங்கநாதன், மாநிலத் துணைத் தலைவா் டி. நாகசூா்யா, செயலா்கள் வீ. ராமலிங்கம், நா. இந்திராகாந்தி, மாவட்டச் செயலா் பி. வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.