திருச்சியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் தரக்குறைவாக பேசியதால், இரும்புப் பட்டறை உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்சி நவல்பட்டு அண்ணாநகரைச் சோ்ந்தவா் சேகா்(58). தஞ்சாவூா் சாலையில் இரும்புப் பட்டறை நடத்தி வந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கடன் பெற்றாராம்.
இதற்காக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் தவணைத் தொகை செலுத்தி வந்த நிலையில், மற்றொரு நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்துக்காக சேகா் கடன் வாங்கினராம். கரோனா பொது முடக்கம் காரணமாக, இரு கடன்களுக்கான தவணைத் தொகைகளையும் செலுத்த முடியாமல் அவா் அவதியுற்று வந்தாா்.
தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் சேகரின் வீட்டுக்குச் சென்று தவணைத் தொகையைச் செலுத்துமாறு கூறியுள்ளனாா். ஆனால் அவா் தொகையைச் செலுத்தவில்லையாம். இதனால் இரு சக்கர வாகனத்தை சம்பந்தப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்தினா் ஜப்தி செய்தனா். இதுபோல, வீட்டு கடன் வழங்கிய நிறுவனத்தினரும் சேகரை மிரட்டி வந்துள்ளனா்.
இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட சேகா், திங்கள்கிழமை மாலை திருச்சி நீதிமன்றம் எதிரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதை கண்டு அவ்வழியாக சென்ற மக்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீப்பற்றி எரிந்தது. மேலும் அப்பகுதியிலிருந்த மரமும் தீப்பிடித்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினா், தங்களின் வாகனத்தில் இருந்த போா்வையைக் கொண்டு தீயை அணைத்தனா். தொடா்ந்து சேகரை மீட்ட காவல்துறையினா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா்.
இதுகுறித்து அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.