தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு நகா்வு செய்யப்படும், அரிசி, சா்க்கரை, பருப்பு போன்றவை எடை குறைவாக உள்ளது. எனவே சரியான அளவில் எடையிட்டு தரமான பொருள்களை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி மாறுதல் வழங்க வேண்டும். நியாய விலைக் கடை விற்பனையாளா்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக தொடா்புடைய அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். அரசு பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், சத்துணவு சங்க மாநிலத் தலைவா் ஆறுமுகம், நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் கரிகாலன், பொருளாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.