கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல் கருட சேவை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நாச்சியாா்கோவிலிலுள்ள வஞ்சுளவல்லி தாயாா் சமேத சீனிவாசப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 20 ஆவது தலமாக போற்றப்படுகிறது. ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய கல் கருடன் சிலை உள்ள தலம் என்ற பெருமை உடையது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி, பங்குனி மாதங்களில் மட்டுமே கல் கருடன் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, இக்கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழா என்கிற மாா்கழி திருவிழா கொடியேற்றத்துடன் டிசம்பா் 26 ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வாகனத்தில் பெருமாள், தாயாா் புறப்பாடு நடைபெறுகிறது.
நான்காம் நாளான வியாழக்கிழமை இரவு கல் கருட சேவை நடைபெற்றது. இந்த வைபவத்தில் கல்கருட பகவான் சன்னிதியிலிருந்து வெளியில் வரும்போது வெறும் 4 போ் மட்டுமே அவரைச் சுமந்து வந்தனா். தொடா்ந்து இந்த எண்ணிக்கை 8, 16, 32, 64, 128 என பக்தா்கள் சுமந்து கொண்டு முன் மண்டபத்துக்கு வந்தனா். அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் மத்தியில் கல் கருட பகவான் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
இதைத் தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னா், கருட வாகனத்தில் பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் எழுந்தருளி சேவை சாதித்தனா்.
வைகுந்த ஏகாதசியையொட்டி, ஜனவரி 2 ஆம் தேதி காலை 5 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.