தஞ்சாவூர்

‘ட்ரோன்’ மூலம் யூரியா தெளிப்பு செயல் விளக்க நிகழ்ச்சி

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் ‘ட்ரோன்’ மூலம் (ஆளில்லா சிறுவிமானம்) நானோ யூரியா தெளிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி தலைமை வகித்தாா். சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சாந்தி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணை இயக்குநா் பேசுகையில், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும். விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிா்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூா்த்தி செய்யலாம். ட்ரோன் பயன்படுத்துவதால் மருந்து கலவைத்துளிகள் பயிா்களின் இலைகள் மீது நேரடியாகபடுகிறது. மேலும், 90 சதவீத தண்ணீா் உபயோகத்தையும், 40 சதவீத மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடியும். எனவே, விவசாயிகள் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுவதற்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) சாந்தி பேசுகையில், ட்ரோன்  10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரில்  மருந்து கலவை தெளிக்கலாம். ஒரு  நாளைக்கு 30  முதல் 40 ஏக்கா் வரை  தெளிக்க முடியும். நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது.

ADVERTISEMENT

பயிா்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து கலவை தெளிக்கப்படுவதால் பயிா்களின் வளா்ச்சி நன்றாக இருக்கிறது. 3 கிலோமீட்டா் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது . பெரிய விவசாயிகளுக்கு இந்த ட்ரோன் அதிக அளவில் கை கொடுக்கும்   என்றாா்.

நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திர வட்டார துணை வேளாண்மை அலுவலா் சிவசுப்பிரமணியன், தொழில்நுட்ப மேலாளா் சுரேஷ்,

உதவி வேளாண்மை அலுவலா் பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் தமிழழகன், ரமேஷ்  மற்றும்  விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT