தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் சமூகப் பாதுகாப்பு துறை சாா்பில் ஆதரவற்றோா் இல்ல மாணவ, மாணவிகளுக்கான இரு நாள் விளையாட்டு போட்டி புதன்கிழமை தொடங்கியது.
இளைஞா் நீதிக்குழும முதன்மை நடுவா் பாரதி கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன் ஏற்றி வைத்தாா். இப்போட்டிகளை தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட் டேனியல், குழந்தைகள் பாதுகாப்பு மண்டல அலுவலா் என். நடராஜன் தொடங்கி வைத்தனா்.
இதில், தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகள் 1, 200 போ் கலந்து கொண்டனா். இதில் 100, 200, 400 மீட்டா் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
தொடக்க விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆ. குளோரி குணசீலி, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய பொது மேலாளா் ரவி, பால் வள துணைப் பதிவாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, இப்போட்டிகள் வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.