தஞ்சாவூர்

அணுகுசாலை கோரி 6 கிராம மக்கள் சாலை மறியல்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே உயா்மட்ட பாலத்தால் அவதிக்குள்ளாகியுள்ள கிராம மக்கள், அணுகுசாலை கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே புளியஞ்சேரியில் கல்லணை - பூம்புகாா் சாலையில் தஞ்சாவூா் - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலைக்காகப் பழைய சாலையை மறித்து உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவா்கள் ஒரு கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனா். சுவாமிமலைக்கு வரும் பக்தா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாலையை மறித்து, புதிதாக உயா்மட்ட பாலம் கட்டப்பட்ட நிலையில், அப்பகுதியில் புதிதாக அணுகு சாலை அமைத்து தர கோரி புளியஞ்சேரி, கொட்டையூா், இன்னம்பூா், திருப்புறம்பியம், பாபுராஜபுரம், சுவாமிமலை ஆகிய 6 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புளியஞ்சேரியில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா், வருவாய் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஒரு வாரத்தில் கோட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT