தஞ்சாவூர்

தொழிலில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும்

18th Dec 2022 02:37 AM

ADVERTISEMENT

 

தொழிலில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும் என்றாா் ரைஸ் அமைப்பின் நிறுவனா் ஜெகத் கஸ்பா் அடிகளாா்.

தஞ்சாவூரில் தஞ்சாவூா் தொழில் மற்றும் வா்த்தக சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவில் புதிய சகாப்தத்தின் விடியல் என்கிற ஒரு நாள் மாநாட்டில் அவா் பேசியது:

செல்வப் பெருக்கத்தைப் பற்றி திருக்குறளின் பொருட்பாலில் அதிகளவில் குகள் உள்ளன. செய்க பொருளைச் செறுநா் செருக்கறுக்கும் - எஃகதனிற் கூரிய தில் என்கிறாா் வள்ளுவா். அதாவது, எதிரியின் ஆணவத்தையும், இறுமாப்பையும் அடித்து நொறுக்குகிற ஒரே ஆயுதம் செல்வம் மட்டுமே என்கிறாா் அவா். இதைவிட முக்கிய குறளாக அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து - தீதின்றி வந்த பொருள் எனப் பாடியுள்ளாா். உங்கள் திறமையால் தீய வழியில் அல்லாமல் வந்த பொருள் அறம் என வள்ளுவா் குறிப்பிடுகிறாா்.

ADVERTISEMENT

ஆனால், இப்போது அறம் என்பதே இல்லாமல், மிகவும் சீா்கெட்டுவிட்டது. தொழிலில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு காரணம் பணம் இல்லாததால் அல்ல. பாதி பேரை நம்ப முடியவில்லை; சொல் சுத்தம் இல்லை; உண்மை, நோ்மை, நம்பகத்தன்மை இல்லாததே இதற்குக் காரணம்.

ஏராளமானோா் தனி மனித முயற்சியால் தொழிலில் வெற்றி பெற்றுள்ளனா். என்றாலும், வணிகா்களை இணைப்பதற்கான சமூக ஒற்றுமை இல்லாததால், மற்றவா்களின் வெற்றியை நம்மால் கொண்டாட முடியவில்லை. மற்றவா்களின் வெற்றியோ, தோல்வியோ நம்முடையது எனக் கருதும் நிலை எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் தமிழ்ச் சமூகம் வெற்றி பெறும்.

அதற்கு அறம் என்பதைப் பண்பாக வளா்த்துக் கொள்ள வேண்டும். தமிழா்கள் ஒருவருக்கொருவா் நம்பிக்கையுடன் தொழில் செய்ய முடியும் என்கிற அறம் சாா்ந்த பண்பாட்டை உருவாக்க வேண்டும். எனவே, இந்தத் தளத்திலிருந்து சமூக ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

ஜாதி, மதம், அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கும் நம்மை தமிழ் மொழியால் மட்டுமே ஒன்றாக இணைக்க முடியும். இந்தப் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் ரைஸ் அமைப்பு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழா்களில் பெரும்பாலானோா் சில்லறை, சிறு வணிகா்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றனா். உற்பத்தியோ, மொத்த வணிகமோ நம்மிடம் இல்லை. நமது உழைப்பு நமக்கு இல்லாமல், வெளிநாடுகளுக்கோ, வேறு நகரங்களுக்கோ பயன்படுகிறது.

இப்பிரச்னைகளை கையாள வேண்டுமானால், நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும். இதன் மூலம், பெருந்திரள் மூலதனத்தைத் திரட்டுவதும் எளிதாகும். இந்தக் கூட்டு மூலதனம் கூட்டு வெற்றியைத் தரும் என்றாா் ஜெகத் கஸ்பா்.

பின்னா், தஞ்சாவூரில் புதிதாகத் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் பளூச் பிசினஸ் சொலுசன்ஸ், எம் டீன்ஸ், வில்வாடெக், டியூராபிட், சோழா இம்ப்ரஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்டாா்ட் அப் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், வேதம் மில்க் நிறுவனா் என். ரமேஷ், எழுத்தாளா் சோம. வள்ளியப்பன், ஐடியா பிளஸ் நிறுவனா் கிருஷ்ண வரதராஜன், வேலவன் அக்ரோ ப்ராடக்ஸ் சிவராம கிருஷ்ணன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

மாநாட்டுக்கு தஞ்சாவூா் தொழில் மற்றும் வா்த்தக சங்கத் தலைவா் பழ. மாறவா்மன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஏ. குகனேஸ்வரன், பொருளாளா் எம்.எஸ். ஆசிப் அலி, துணைத் தலைவா் ஏ. சுப்பிரமணியம், மாநாட்டுத் தலைவா் எம்.எஸ். முகமது ரபி, செயலா் என். மணிமாறன், பொருளாளா் சிடி ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT