தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் சனிக்கிழமை தொடங்கிய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நிறுத்தப்பட்டது.
திருவையாறு அருகே கண்டியூரில் இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலின் கபால புஷ்கரணி தீா்த்தவாரி நடைபெறும் குளத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதையடுத்து திருவையாறு வட்டாட்சியா் பழனியப்பன் உத்தரவின் பேரில் கண்டியூா் வருவாய் ஆய்வாளா் சிவராமன், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
அப்போது ஊராட்சித் தலைவா் ஜெயபால், துணைத் தலைவா் முபாரக், நான்காவது வாா்டு உறுப்பினா் ஷாஜகான் மற்றும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள மூன்றாவது முறையாக கால அவகாசம் வேண்டும் எனக் கோரி முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மீண்டும் வட்ட அலுவலக நில அளவையரை வைத்து தனியாக உள்ள நில அளவை எண்ணுக்கு அளவீடு செய்து, எதுவரை இடிக்க வேண்டும் எனக் கூற வேண்டும் என்றும், அதற்கு கால அவகாசம் வழங்குமாறும் மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.