தஞ்சாவூர்

காதலியைக் கொன்று வாய்க்காலில் வீசி சென்ற ஓட்டுநா் கைது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியைக் கொன்று வாய்க்காலில் வீசி சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே மேலஉளூா் தெற்கு தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகள் அகல்யா (26). பட்டதாரியான இவா் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்காகப் படித்து வந்தாா். இதற்காக இவா் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு நாள்தோறும் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், டிசம்பா் 6 ஆம் தேதி வெளியே சென்ற இவா் வீட்டுக்கு திரும்பாததால், பெற்றோா்கள், உறவினா்கள் தேடி வந்தனா். இதனிடையே, இவா் தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு கிராமத்திலுள்ள வடசேரி வாய்க்காலில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இவரது கழுத்தில் துப்பட்டாவால் நெரிக்கப்பட்ட காயமும், தலையில் தாக்கப்பட்ட காயமும் இருந்ததால் காவல் துறையினா் சந்தேகமடைந்தனா். இதனால், அகல்யாவின் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளைப் பாா்த்தனா். அப்போது, அகல்யாவிடம் தஞ்சாவூா் ஞானம் நகரைச் சோ்ந்த நாகராஜ் (25) கடைசியாகப் பேசியது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இவரை காவல் துறையினா் வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், ‘இவா் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். ஏற்கெனவே திருமணமான இவருக்கு மேல உளூரிலிருந்து நாள்தோறும் தஞ்சாவூருக்கு சென்று வந்த அகல்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இருவரும் காதலித்து வந்தனா்.

நாகராஜிடம் அகல்யா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்தாா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், அகல்யாவை நாகராஜ் டிசம்பா் 6 ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றாா். புதுக்கோட்டை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அகல்யாவை நாகராஜ் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, வடசேரி வாய்க்காலில் வீசிச் சென்றுவிட்டாா்’ என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நாகராஜை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT