மேன்டூஸ் புயல் எச்சரிக்கையையொட்டி, தஞ்சாவூருக்கு தேசிய பேரிடா் மீட்பு படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
இப்புயலையொட்டி, தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்பு படையிலிருந்து தலா 25 போ் கொண்ட குழுவினா் அனுப்பப்பட்டுள்ளனா்.
இதன்படி, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை தளத்திலிருந்து தஞ்சாவூருக்கு உதவி ஆய்வாளா்கள் அலோக் குமாா் சுக்லா, டி.வி. பாட்டீல் தலைமையில் 25 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை வந்தனா். இக்குழுவினா் வெள்ள தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளனா்.
இந்த மீட்புக் குழுவினரை தஞ்சாவூா் மாவட்ட பேரிடா் மீட்பு குழு வட்டாட்சியா் ராஜேஸ்வரி, செஞ்சிலுவை சங்கப் பொருளாளா் எஸ். முத்துக்குமாா் வரவேற்று ஒருங்கிணைத்து வருகின்றனா்.