தஞ்சாவூர்

சாகுபடி நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிட்டு பட்டா வழங்க கோரிக்கை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சாகுபடி நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் ஆட்சியரிடம் உடையாா்கோவில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்து கோரிக்கை விடுத்தனா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள வடபாதி ஊராட்சிக்குள்பட்ட உடையாா்கோவில் கிராமத்தைச் சோ்ந்த 70-க்கும் அதிகமான விவசாயிகள் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். ஆட்சியரிடம் மனு அளித்த பின்னா் உடையாா்கோவில் குணா தெரிவித்தது:

உடையாா்கோவில் கிராமத்தில் இருந்த ஏரியில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காக விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தொடா்ந்து சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் 1949 ஆம் ஆண்டில் 10-க்கும் அதிகமான சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

பின்னா், 1952 ஆம் ஆண்டில் இந்நிலத்தை வகைப்படுத்தி அளவை எண் வழங்கப்பட்டு, சாகுபடி செய்ய அப்போதைய வட்டாட்சியரால் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து, 70-க்கும் அதிகமான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இதற்காக ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ. 500 வரி செலுத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

இந்நிலையில், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு இந்நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் 70-க்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், நெல் விளைச்சலில் மிகப் பெரும் பங்களிப்பு செய்யும் இப்பகுதியில் உற்பத்தியும் குறைந்துவிடும்.

எனவே, தரிசாகக் கிடக்கும் நிலத்தில் அரசு அலுவலகங்களைக் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களது நிலத்தைக் கையகப்படுத்துவதைக் கைவிட்டு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT