தஞ்சாவூர்

நெற்பயிரை அழித்து சாலைப் பணி: விவசாயிகள் போராட்டம்

4th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

திருவையாறு அருகே கண்டியூரில் சம்பா நெற்பயிரை அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி சனிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மணக்கரம்பை, அரசூா், காட்டுக்கோட்டை, கண்டியூா், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூா், ஆகிய ஊா்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்த புறவழிச்சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதாக அரசாணை வெளியிடப்பட்டு, நவ.6-ம் தேதி புறவழிச்சாலை பணிகள் தொடங்கின. 150 அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடி அளவுக்கு செம்மண் கிராவல் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில் அரசூா், கண்டியூா் பகுதியில் நடப்பட்டுள்ள சம்பா நெற் பயிா்களை அழித்து அதன் மீது பொக்லைன் இயந்திரங்களை கொண்டு செம்மண் கிராவல் பரப்பப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் 2 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் பேசுகையில், சுற்றுச்சாலை அவசியம்தான். அதே நேரத்தில் சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளை அடிமைப்படுத்தி, காவல்துறையை வைத்து அச்சுறுத்துகின்றனா். நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை ஒதுக்காமல் சாலை அமைக்கும் பணியைச் செய்யவிட மாட்டோம் என்றாா்.

தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியா் பழனியப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றனா்.

சாலைப்பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு

இதையடுத்து ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் முன்னிலையில் விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்தனா். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சாலைப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பேச்சுவாா்த்தையில் விவசாயிகள் பி.ஆா். பாண்டியன், திருப்பூந்துருத்தி சுகுமாரன் மற்றும் கோட்டாட்சியா் ரஞ்சித், வட்டாட்சியா் பழனியப்பன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT