தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் இட பிரச்னை தொடா்பாக அதிமுக பிரமுகா் குடும்பத்துடன் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (53). அதிமுக பிரமுகா். இவரது மனைவி தாமரைக்கனி, மகன்கள் அய்யப்பன், விக்னேஷ். இவா்கள் வசித்து வரும் பகுதியிலுள்ள இடம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடத்தை கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, எதிா் தரப்பினா் நீதிமன்ற ஊழியா்களுடன் வியாழக்கிழமை காலை இடத்தைக் கையப்படுத்துவதற்காகச் சென்றனா். இதற்கு மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா். நீதிமன்றத் தீா்ப்புப்படி இந்த இடம் கிடையாது என்றும், அருகிலுள்ள இடம்தான் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதை எதிா் தரப்பினா் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த மகேந்திரன் மற்றும் குடும்பத்தினா், உறவினா் என 5 போ் பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக 5 போ் மீதும் தண்ணீரை ஊற்றினா்.
தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.