தஞ்சாவூர்

கரந்தை குளக்கரை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிா்ப்பு

2nd Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் கரந்தை குஜிலியன் குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், திரும்பிச் சென்றனா்.

தஞ்சாவூா் கரந்தையில் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமான குஜிலியன் குளம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சீரமைத்து, சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதனால், இக்குளத்தின் மேல் கரையில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன. இதைத்தொடா்ந்து, இக்குளத்தின் வட கரையில் உள்ள சுமாா் 10 வீடுகளையும் காலி செய்யுமாறு மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் அனுப்பினா்.

மேலும், டிசம்பா் 1 ஆம் தேதிக்குள் காலி செய்யப்படாவிட்டால், வீடுகள் இடிக்கப்படும் எனவும் அலுவலா்கள் அறிவித்தனா். இதன்படி, பொக்லைன் இயந்திரத்துடன் மாநகராட்சி உதவி செயற் பொறியாளா் எம். ராஜசேகரன், உதவிப் பொறியாளா்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை சென்றனா்.

ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், அலுவலா்களிடம் எங்களுக்கு குடியிருக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது மாற்று இடம் கொடுத்து வீடுகளை இடிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

அப்பகுதி மக்களிடம் அலுவலா்களும், காவல் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீா் நிலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால், இடிப்பது உறுதி என்றும், உயா் அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திக் கொள்ளுமாறும், அதுவரை இடிக்கமாட்டோம் எனவும் அலுவலா்கள் கூறி திரும்பிச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT