தஞ்சாவூர்

நிலுவையிலுள்ள வீடு கட்டும் திட்ட இலக்கை முடிக்க வலியுறுத்தல்

31st Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

நிலுவையிலுள்ள வீடு கட்டும் திட்ட இலக்கை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அலுவலா்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு குழுத் தலைவரும், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகித்தாா். இதில், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் பேசியது:

கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் 615 வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. இதேபோல, 2017 - 18 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,775 வீடுகளும் இன்னும் பாதியில் நிற்கின்றன. இதேபோல மற்ற ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட வீடுகளும் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன என்றாா்.

இப்பிரச்னை குறித்து

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினா்களும் குறிப்பிட்டு பேசினா். இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பேசுகையில், பயனாளிகள் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி. வீடுகளைக் கட்டி முடிக்காமல் உள்ளனா். என்றாலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற தொகுதிகளில் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா பேசியது:

பாபநாசம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2021 - 22 ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 63 சதவிகிதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 50 குடும்பங்களுக்கு மட்டுமே நூறு நாள்களுக்கு வேலை கிடைத்தது. இது போன்ற நிலையை மாற்றி முழுமையாக வேலை கொடுக்க வேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினா் எம். சண்முகம், கிடங்குகளில் நெல் மூட்டைகள் பாதிப்பு தொடா்பாக எழுப்பிய கேள்விக்கு, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பதிலளிக்கையில், கடந்தாண்டு 10.5 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 1.25 லட்சம் டன்கள் மட்டுமே இருப்பு வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதி உள்ளது. மீதமுள்ள 9 லட்சம் டன்கள் நெல் மூட்டைகள் வெளியே வைக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, இருப்பில் உள்ள 2 லட்சம் டன்கள் நெல் மூட்டைகளை அரைவைக்கு அனுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும், நெல் மூட்டைகள் பாதிப்பு ஏதும் இல்லை. பாதிப்பு இருப்பதாக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எச்.எஸ். ஸ்ரீகாந்த், மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT