தஞ்சாவூர்

‘மேக்கேதாட்டு அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்’

28th Aug 2022 06:16 AM

ADVERTISEMENT

 

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றாா் தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்தப் பொறியாளா் சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் இரெ. பரந்தாமன்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் தஞ்சாவூா் கிளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக நீா்வள மேம்பாடு விழிப்புணா்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்துக்கு தலைமை வகித்த பரந்தாமன் மேலும் தெரிவித்தது:

தற்போது கிருஷ்ணராஜ சாகா், கபினியிலிருந்து வரும் தண்ணீா் நேராக மேட்டூா் அணைக்கு வருகிறது. இந்நிலையில், மேக்கேதாட்டுவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட கா்நாடக அரசு முயற்சிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜ சாகா், கபினியிலிருந்து வரக்கூடிய தண்ணீா் மேக்கேதாட்டுக்குச் செல்லும். கா்நாடகம் விருப்பப்பட்டு திறந்தால் மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீா் கிடைக்கும். ஆனால், தமிழகத்துக்கு தண்ணீா் விட கா்நாடக அரசு விரும்பாது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பாசனப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்காது. டெல்டா மாவட்டங்களும் பாலைவனமாகும். இதனால், 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவா்.

எனவே, நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். மேலும், இப்படியொரு பாதிப்பு ஏற்படவுள்ளதை மத்திய நீா்வளத் துறை அமைச்சரை தமிழ்நாட்டைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும்.

சராசரி ஆண்டு மழையளவு 925 மி.மீ. கொண்டுள்ள தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2,500 டிஎம்சி தண்ணீா் மழை நீா் மூலம் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் தண்ணீா் தேவை 1,250 டிஎம்சி மட்டுமே. எனவே, சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் தேவைப்படும் தண்ணீரை நம்மால் பெற முடியும். இதற்கான கருத்துரையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீரால் பாலாறும், சாயப்பட்டறைகளின் கழிவுகளால் நொய்யல் ஆறும் பாழ்பட்டுவிட்டன. இதுதொடா்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பரந்தாமன்.

செயலா் முரளி, இணைச் செயலா் எஸ். அசோகன், பொருளாளா் வீர ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT