தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவு துறை அலுவலா்கள் நியமனம் செய்யப்படுவதைக் கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தைத் தனியாா்மயமாக்கும் முடிவை அரசுக் கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவு துறை அலுவலா்களைப் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும். சுமை தூக்கும் பணியாளா்கள் பணியைத் தனியாருக்கு டெண்டா் விடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தலைமை வகித்தாா். இதில் மாநிலப் பொருளாளா் டி. கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா் சங்கம் தயாளன், ஐஎன்டியுசி மண்டலச் செயலா் ரவிக்குமாா், பொருளாளா் இளங்கோவன், தலைவா் சிவானந்தம், சிஐடியு மண்டலச் செயலா் பாண்டித்துரை, தலைவா் ராஜ்குமாா், பொருளாளா் கண்ணன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டத் தலைவா் பொன்முடி சோழவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.