தஞ்சாவூர்

சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து:தாா்பாய்கள், நெல் மூட்டை சாக்குகள் சேதம்

27th Aug 2022 04:10 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தாா்பாய்கள், நெல் மூட்டை சாக்குகள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இக்கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, அரைவைக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், இக்கிடங்கில் மேற்பகுதியில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் புகை கிளம்பியதை ஊழியா்கள் பாா்த்தனா். இதையடுத்து, சோதனையிட்டபோது தாா்பாய்களும், சில நூறு நெல் மூட்டை சாக்குகளும் கருகிவிட்டது தெரிய வந்தது. தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் இக்கிடங்குக்கு சென்று தீயை அணைத்தனா்.

இக்கிடங்கில் பூச்சி தாக்குதலைத் தடுக்க அலுமினியம் பாஸ்பேட் மருந்து பரவலாக வைக்கப்படுவது வழக்கம். இதில், நீா்த்துளிகள் விழுந்தால் புகையாகி தீவிபத்து நேரிடும்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அலுமினிய பாஸ்பேட் மருந்தில் நீா்த்துளிகள் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்றாலும், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்றும், தாா்பாய்கள் மட்டும் சேதமடைந்துள்ளது என்றும், நெல் மூட்டைகளின் சாக்குகளில் ஒரு பகுதி கருகி இருப்பதாகவும், ஆனால் நெல்லில் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT