கும்பகோணம் அருகே கரகம் எடுத்துச் செல்வதற்கான பாதை மறிக்கப்பட்டுள்ளதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே சாக்கோட்டை அரசலாற்றங்கரையில் இருந்து சுற்றியுள்ள கோயில்களுக்கு பால் குடம், காவடி, கரகம் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், இப்பாதையை மறித்து கட்டடம் கட்டுவதற்காகப் பொதுப் பணித் துறையினா் தூண் அமைத்துள்ளதால், கோயில் விழாக்களுக்கு காவடி, கரகம் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிருப்தியடைந்த சாக்கோட்டை, பழவாத்தான்கட்டளை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், பொதுமக்கள் செல்லும் வகையில் பாதை அமைத்து கட்டடம் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.