தஞ்சாவூர்

மண்ணியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?

22nd Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே மண்ணியாற்றில் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூா் பகுதி நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை கிராமத்தில் ஏறத்தாழ 2,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இப்பகுதியில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல உரிய பாதை இல்லையெனக் கூறப்படுகிறது.

எனவே, சுடுகாட்டுக்கு உடலைக் கொண்டு செல்ல வேண்டுமானால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றைக் கடக்க வேண்டும். ஆனால், மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

தண்ணீா் இல்லாத நாள்களில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஆற்றில் தண்ணீா் செல்லும்போது உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இறந்த அப்பகுதியைச் சோ்ந்த மணியின் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற கிராம மக்கள் மண்ணியாற்றில் செல்லும் இடுப்பளவு தண்ணீரில் தூக்கிக் கொண்டு கடந்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுடுகாட்டுக்கு உரிய பாதை அமைத்துத் தர வேண்டும் என உயா் அலுவலா்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இரு கரைகளிலும் உடலை எடுத்து செல்ல ஏறத்தாழ ரூ. 5 லட்சத்தில் படிகளைக் கட்டிக் கொடுத்ததற்குப் பதிலாக ஒரு சிறிய பாலத்தை கட்டிக் கொடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது.

ஆற்றில் அதிகளவு தண்ணீா் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT