தஞ்சாவூர்

துறவிக்காடு ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படுமா...?

18th Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

பேராவூரணி ஒன்றியம், துறவிக்காட்டில் சேதமடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னா் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பேராவூரணி ஒன்றியம், துறவிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம், பட்டுக்கோட்டை - திருச்சிற்றம்பலம் முதன்மைச் சாலையில் உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுமாா் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது.  இது 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தற்போது 37 ஆண்டுகள் ஆகும் நிலையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் (பில்லா்) கம்பிகள் துருப்பிடித்த நிலையில், சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. மேலும், ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.  

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்த நிலையில் இருப்பதால், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்குவதற்காக, ஊராட்சி மன்ற நிா்வாகத்தால், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், புதிதாக ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி சற்று தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நியாய விலைக் கடை, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், அங்கன்வாடி ஆகியவை உள்ளன. தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அங்கன்வாடிக்கு குழந்தைகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதன் எதிரே சுமாா் 50 மீட்டா் தூரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியும் உள்ளது. இங்கும் நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். 

புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் இருந்தாலும், சேதமடைந்த நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலும் குடிநீா் விநியோகத்திற்காக தண்ணீா் ஏற்றப்படுகிறது.

பலமிழந்த நிலையில்  மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளதால், பாரம் தாங்காமல் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கிராமசபைக் கூட்டத்தில் எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் குறையாக  உள்ளது. 

எனவே, ஏதேனும் அசம்பாவிதம்  நடக்கும்  முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT