தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே ஆக்கிரமிப்பிலிருந்த 4 குளங்கள் மீட்பு

17th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே ஆக்கிரமிப்பிலிருந்த 4 குளங்களை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை மீட்டாா்.

தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் இரண்டேகால் ஏக்கரில் குளம் இருந்தது. இக்குளம் தூா்வாரப்படாததாலும், பராமரிப்பின்மை காரணமாகவும் தரிசாக மாறியதால், அதில் சிலா் நெல், எள், கடலை, உளுந்து ஆகியவற்றை சாகுபடி செய்து வந்தனா். இக்குளத்தை மீட்டெடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியரிடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதன்பேரில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று இக்குளத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டாா். இதைத்தொடா்ந்து, இக்குளத்தை ஆழப்படுத்தி, சீரமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தாா்.

இதேபோல, தளவாய்ப்பாளையத்தில் 3 ஏக்கரில் ஒரு குளத்தையும், ஒன்றேகால் ஏக்கரில் மற்றொரு குளத்தையும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியா் செவ்வாய்க்கிழமை மீட்டாா். இக்குளத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

பின்னா், செண்பகம்பாள்புரத்தில் 46 ஏக்கா் பரப்பளவில் உள்ள அம்மாள் ஏரியில் ஏறத்தாழ 5 ஏக்கா் பரப்பளவுக்கு சிலா் ஆக்கிரமிப்பு செய்து, தென்னை, வாழை, நெல், கடலை போன்ற சாகுபடிகளை மேற்கொண்டு வந்தனா். இந்த இடத்தையும் ஆட்சியா் அளவீடு செய்து மீட்டாா்.

அப்போது, கும்பகோணம் கோட்டாட்சியா் லதா, பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT