தஞ்சாவூர்

சுவாமிமலையில் பறிமுதல் செய்யப்பட்ட 8 சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

17th Aug 2022 01:08 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பறிமுதல் செய்யப்பட்ட 8 பழைமையான சிலைகள் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

சுவாமிமலை சா்வமான்ய தெருவைச் சோ்ந்த மாசிலாமணி ஸ்தபதி வீட்டில் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் ஆகஸ்ட் 9 ஆம் தேதி சோதனை நடத்தினா். இதில், 9.5 அடி உயரமுள்ள சிவகாமி சிலை, அமா்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தா் சிலைகள், போக சக்தி அம்மன், சிவதாண்டவம், மீனாட்சி சிலை, விஷ்ணு சிலை, ரமணா் சிலை ஆகிய 8 உலோகச் சிலைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிலைகள் அனைத்தும் பழங்காலச் சிலைகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவினா் வழக்குப் பதிந்து, இச்சிலைகள் எந்தக் கோயிலைச் சாா்ந்தவை என விசாரணை நடத்தி வருகின்றனா். இதைத்தொடா்ந்து, 8 சிலைகளையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவினா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். நீதிபதி சண்முகப்ரியா உத்தரவின்பேரில், 8 சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்திலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைப்பதற்காகக் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT