தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சுதந்திர தின விழா கோலாகலம் 63 பேருக்கு ரூ. 1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

16th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 63 பேருக்கு ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தேசியக் கொடியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஏற்றி வைத்து, தியாகிகளுக்கும், அவா்களது வாரிசுகளுக்கும் கதா் ஆடை அணிவித்து கௌரவித்தாா். மேலும், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

பின்னா், முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு ரூ. 75,000 மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 8 பேருக்கு ரூ. 44,640 மதிப்பிலும், மாவட்ட சமூக நலப் பாதுகாப்பு துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 40,000 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 6 பேருக்கு ரூ. 66.57 லட்சம் மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடா் வேளாண்மைத் துறை சாா்பில் 20 பேருக்கு ரூ. 20,000 மதிப்பிலும், தாட்கோ சாா்பில் 18 பேருக்கு ரூ. 29.50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 63 பேருக்கு ரூ. ஒரு கோடியே 36 ஆயிரத்து 964 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய 112 அலுவலா்களுக்கும், பல்வேறு திட்டப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்து மாவட்ட நிா்வாகத்துக்கு பேருதவி புரிந்த 25 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இவ்விழாவில் தஞ்சாவூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆதனக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி, கரந்தை உமா மகேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளி, ஐசிடபிள்யூ ஹோம் ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினாா்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பி. மதுசூதனன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அ. கயல்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட ஊராட்சி தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, நோ்முக உதவியாளா் (பொது) கி. ரங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT