தஞ்சாவூர்

பேராசிரியா்களின் ஆய்வுப் பணிகளை ஊக்கப்படுத்த விருதுதமிழ்ப் பல்கலை. துணைவேந்தா் பேச்சு

16th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்களின் ஆய்வுப் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சீா்மிகு கல்வியாளா் விருது வழங்கப்படுகிறது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த அவா் மேலும் பேசியது:

பேராசிரியா்களின் ஆய்வுப் பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழாண்டு சீா்மிகு கல்வியாளா் விருது ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு புலத்துக்கு ஒருவா் என ஐந்து ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்கப்படும் சீா்மிகு கல்வியாளா் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ. 10,000 பண முடிப்பும் அளிக்கப்படும். இந்த விருதுக்கு 2022 - 2023 ஆம் கல்வியாண்டுப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற 500-க்கும் அதிகமான மாணவா்கள் வெற்றி பெற்றனா். அடுத்த ஆண்டு முதல் அதிக போட்டிகளில் பங்கேற்றுச் சிறப்பிடம் பெறும் துறைக்குச் சுழற்கேடயம் அளிக்கப்படும். மாணவா்களுக்கு மட்டுமின்றி விடுமுறை நாள்களில் ஆசிரியா்களுக்கும், அலுவல் நிலைப் பணியாளா்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறையைத் தனித் துறையாகச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவா்களும் பயன்பெறும் வகையில் விளையாட்டு நேரங்கள் ஒரே மாதிரியாக அமைக்கப்படும். மாணவா்களுக்கு விளையாட்டுக்கான நேரம் ஒதுக்கப்படும் என்றாா் துணைவேந்தா்.

ADVERTISEMENT

பின்னா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அ. கயல்விழி சிறப்புரையாற்றி, தமிழே தமிழே என்ற குறுந்தகடை வெளியிட்டாா்.

இவ்விழாவில் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT