தஞ்சாவூர்

தஞ்சை காவல் பல்பொருள் அங்காடியில் முறைகேடு: உதவி ஆய்வாளா், காவலா்கள் உள்பட 5 போ் கைது

14th Aug 2022 01:17 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் காவல் பல்பொருள் அங்காடியில் ரூ. 40 லட்சம் முறைகேடு செய்தது தொடா்பாக உதவி ஆய்வாளா், இரு காவலா்கள் உள்பட 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகம் எதிரே உள்ள தஞ்சாவூா் காவல் பல்பொருள் அங்காடியில் காவல் துறையினருக்கு அனைத்துப் பொருள்களும் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த அங்காடியில் 2021 பிப்ரவரி முதல் தற்போது வரையுள்ள கணக்குகளை அலுவலா்கள் அண்மையில் தணிக்கை செய்தனா். அப்போது அங்காடிக்கு வாங்கப்பட்ட மின்னணுப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் விற்பனை நிலையத்தில் இல்லை என்பதும், ஆனால் அப்பொருள்களை வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதும், அப்பொருள்களை விற்ற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

மேலும் இந்த அங்காடியில் பணியாற்றும் காவலா் பாலச்சந்திரன் குறைந்த விலையில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருள்களைத் தனது மைத்துனா் பாஸ்கரனின் கடைக்கு அனுப்பி அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் தணிக்கை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில் அங்காடியில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளா் வீராசாமி (54), காவலா்கள் வீரம்மாள் (29), பாலச்சந்திரன் (45), பாலச்சந்திரனின் மைத்துனா் பாஸ்கரன் (40), இவரது சகோதரியும், பாலச்சந்திரனின் மனைவியுமான சித்ரா (38) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக மேலும் சிலரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT